துப்பறிவாளன்
மிஷ்கின்,மற்ற அத்தனை எழுத்தாளர்களையும் போன்றுதான் இவரும்.தன் வாழ்வில் படித்த,அனுபவித்த,தன்னை பாதித்த விடயங்களை தன்னுடைய கதைக்கு ஏற்றவாறு எழுதுகிறார்.எப்படி ந.மோ டீ ஆற்றுவதில் தனக்கென ஒரு தனி பாணி வைத்துள்ளாரோ அதே போல்தான் திரைப்படம் எடுப்பதில் மிஷ்கின்னும் தனக்கென ஒரு பாணி வைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே நிறை அல்லது குறை என்ன என்றால் அவர் வாசித்த கதைகளில் அல்லது பார்த்த படங்களில் காட்டப்படும் விஷயங்களை அப்படியே தன் பாணியில் எடுப்பதுதான்.மிஷ்கினிடம் நான் பார்த்த ஒரு இம்சையான விடயம் இதுதான். 
இருப்பினும் யுத்தம் செய்,பிசாசு,அஞ்சாதே போன்ற படங்களில் மேற்கூறிய இம்சை மிகவும் குறைவு.அதனால் அந்த படங்களும் புத்துணர்வோடு இருந்தன.முகமூடி,இன்றுவரை எனக்கு திருப்தியான படங்களில் ஒன்றுதான்.ஆனால் அதில் Batman கதாபாத்திரத்தை இன்ஸ்பையர் செய்யாமல் நோலனின் டார்க்(K)நைட்டை நகல் செய்து படத்தை எடுத்ததால் அவருடைய ரசிகர் வட்டாரத்திலும் கூட முகமூடியால் நல்ல வரவேற்பை பெற முடியாமல்போனது.

இப்போது துப்பறிவாளன்,"ஷெர்லாக் ஹோம்ஸை தழுவிதான் துப்பறிவாளனை எடுத்துள்ளேன்" என அவரே டைட்டில் காரட்டில் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.இந்த வெளிப்படை,பாரட்டத்தக்கது.

படத்தின் கதை,பல ஐம்பது ரூபா "கிரைம் நாவல்"களில் அல்லது அதிக விலையோடு வரியும் சேர்த்து கொடுத்து வாங்கிப்படிக்கும் ஆங்கில கிரைம் பெஸ்ட் செல்லர்களிலும் நாம் படித்த கதைதான்.தொடக்கத்திலேயே கதை புரிந்துவிடுவதால் அதை எவ்வாறு காட்சிபடுத்தியுள்ளார் என்ற கோணத்தோடு படத்தை பார்க்கலானேன்.காமிரவை வித்தியாசமான கோணங்களில் கையாள்வது,கத்தி சண்டைகள்(அதில் கதாநாயகர் கைக்கு கத்தி கிடைத்ததும் எதிராளியின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவார்),ஓவியங்கள் மற்றும் இசையோடு பயணிக்கும் கதை,திடமான குறிக்கோள் இல்லாத வில்லன்,சுரங்கபாதைகளில் நடக்கும் கூத்துக்கள் என அத்தனை மிஷ்கின் பட காட்சிகளும் இதில் உள்ளன.ஆயினும் அதை தெவிட்டாத விதத்தில் காட்சிபடுத்தியுள்ளார்.
படம் சீராக சென்று கொண்டிருக்கும் பொழுது இடையிடையே மிஷ்கின்தனமான சினிமா எட்டிபார்த்து சலிப்பூட்டுகிறது.என்றாலும் அதே மிஷ்கின்தானமான வேறு சில காட்சிகள் கவனத்தை ஈர்க்கவும் தவறவில்லை.உதாரணமாக பாக்கியராஜ் வரும் அந்த இறுதிகாட்சி,ரெட் டிராகன் சண்டை காட்சி மற்றும் மிகமுக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி என்பன  நன்றாக இருந்தன.

விஷால்,நல்ல தேர்வு,ஆயினும் கொஞ்சம் கேஷுவலான நடிப்பு இன்னுமே தேவை.கதாநாயகன் கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் கணிப்பதாக நினைத்துக்கொண்டு டீடெய்லிங்கே இல்லாமல் வாய்விடுவது பொருந்தவில்லை. (உடைந்த கண்ணாடிக்கு ரப்பர் பேண்ட் போட்டுள்ளதால் கண்டிப்பாக கணவன் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்க வேண்டுமென்பதில்லை,டிரைவரோடு ஓடிப்போனவள் அதே டிரைவரின் கையால் கூட இறப்பதற்கு  வாய்ப்புண்டு).துல்லியமான துப்பறிவாளன் என காட்டப்படும் கனியன் பூங்கன்றனது கதாபாத்திரம் சாதாரண விஷயங்களை கூட ஊகிக்க முடியாமல் தடுமாறுவது கதாபாத்திர முரணாக உள்ளது.தனக்கு நெருக்கமாக உள்ளது இருவரே,அதை கூட அவரால் கணிக்க முடியவில்லை.அதே நேரம்,ஹீரோ தகவல்களை சேமிக்க மற்றையவர்களை பயன்படுத்துகின்ற விதம் நன்றாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
வில்லன்,இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமே இவரது கதாபாத்திரத்தை,பல இடங்களில் வில்லனும் அவனது குழுவும் மடையர்களாக செயற்படுகிறார்கள்.ஒரே பொட்டில் ஹீரோவை போட்டுத்தள்ளாமல் சினிமாத்தனமாக ஏதேதோ செய்கின்றனர்.
அதைப்போல,ஹீரோயின் தவிர மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் ஆழமானதொரு கதாபாத்திர பிண்ணனி கிடையாது.
இது போல சீராக செல்லும் படத்தில் பல நெருடல்கள்.

வயலின் சூழ்ந்த இசை நன்றாக உள்ளது.தொடர்ந்து தன் படங்களில் வயலினையும் ஒரு கதாபாத்திரமாக பயன்படுத்திவருபவர் மிஷ்கின்.துப்பறிவாளனும் அதற்கு விதிவிலக்கல்ல.

படத்தை எந்த நாயில் தொடங்கினாரோ அதே நாயில் முடித்துள்ளது நன்றாக இருந்தது,பிடித்துமிருந்தது.கிளைமாக்ஸில் வரும் சண்டைகாட்சி அப்படியே முகமூடி படத்தில் வைத்த காட்சிதான்.ஒரு சிறு வித்தியாசமென்னவெனில் முகமூடியில் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்த அதேபார்வையாளர்களிடம் இப்போது கைதட்டல்களை வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதுதான்..!

Spiderman Homecoming (2017):Review


ஸ்பைடர்மேன்,எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னரே ஏன்,எதற்கு என்று காரணமில்லாமல் பிடித்துபோன கதாபாத்திரம்.இன்னும் அந்த Craze குறையவில்லை.S P I D E R M A N என்பதற்கு எப்படி ஸ்பெல்லிங் செய்வது என்று கூட தெரியாத காலகட்டத்தில்தான் நான் Sam Raimiன் படங்களை பார்த்தேன்.அப்போது இருவட்டுக்கள் பிரபல்யமாகிக் கொண்டிருந்த காலகட்டம்.எங்கள் வீட்டில் Cassette Video Playerதான் இருந்தது.VCD,DVD,Cassette எதுவுமே வாடகைக்குதான் பெரும்பாலும் விடப்பட்டது.அதைக்கூட தேசிய அடையாள அட்டையை கொடுத்து Proof செய்த பின்னர்தான் தருவார்கள்.நன்கு தெரிந்த கடைக்காரர்கள்  தேசிய அடையாள அட்டையை திருப்பிக்கொடுத்துவிடுவார்கள்,புதியவர்கள் நாங்கள் வாங்கிய பொருளை Return செய்யும் வரை அதனை வைத்துக்கொள்வர்கள்.தே.அ.அ எந்நேரமும் தேவைப்பட்ட காலகட்டமாகையால் பெரும்பாலும் ஒரே நாளுக்குள் பார்த்துவிட்டு கொடுத்துவிடுவோம்.Spiderman 1 அவ்வாறு பார்த்தாக ஞாபகம்.Spiderman 2 வேறு சந்தர்ப்பத்தில் பார்க்க கிடைத்தது.பிறகு வந்த மூன்று படங்களாலும் முதலிரண்டு படங்களை நெருங்கக் கூட முடியவில்லை.இப்போது Spiderman 3 வெளியாகி 10 வருடங்களின் பின் Marvel Cinematic Universe,Colombia Pictures மற்றும் Sony ஆகிய நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் வெளியாகியிருக்கிறது Spiderman:Homecoming

கதைப்படி,சிவில் வாரில் நடந்த அமளிகளுக்கு பின் ஸ்பைடர் மேன் தன் திறமையை நிரூபிக்க சரியான தருணத்தை தேடி கொண்டிருக்கிறார்.அதேநேரம் Avengers முதல் பாக முடிவில் பூமியில் விழுந்த ஏலியன் தொழிற்நுட்ப ஆயுதங்களில் சில பாகங்கள் டூம்ஸ் என்பவனுக்கு கிடைக்கிறது.இதனை பயன்படுத்தி அவனும் அவன் கும்பலும் சிற்சிறு குழுக்களுக்கு ஆயுத விநியோகம் செய்கிறார்கள்.மேலும் அவ்வப்போது கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.இது ஸ்பைடர் மேனுக்கு தெரியவருகிறது.தனியாக களமிறங்கி ஸ்பைடர்மேன் அவனை முறியடித்தாரா என்பதுதான் மெயின் டிரக்.அதனுள்ளேயே அவனுக்கு ஏற்படும் காதல் அல்லது Crush,அவனது பள்ளி வாழ்க்கை,புறந்தள்ளபட்டவனாக அவன் கழிக்கும் நாட்கள் எத்தகையது என்பதனையும் கவனத்திற்கொண்டு கதையை பின்னியுள்ளனர்.Trailerல் பார்த்தற்கு மேலாக கதையில் ஒன்றுமேயில்லை எனலாம்.அவ்வளவு வெறிச்சோடி கிடக்கிறது கதையும் திரைக்கதையும்.

Tom Holland பீட்டர் பாக்கராக நன்றாகதான் நடித்துள்ளார்,ஆனாலும் நடிப்பில் Minor Upgrades நிறையவே தேவை.Michalel Keaton பேட்மேனாகி பேர்ட் மேனாகி இப்போது ராஜாளியாகியுள்ளார்.Vulture கதாபாத்திரத்திலும் ஆழமில்லை.Robert Downy Jr Cameo என்று சொல்லவதற்கில்லை.படம் நெடுகிலும் வருகிறார்.ஏனையவர்கள் இன்ன இன்ன கதாபாத்திரங்களில் நடித்ததனால் பிரபல்யமாவார்கள்.இவர் மட்டும்தான் தான் நடித்ததனால் அயன் மேன் கதாபாத்திரத்தை பிரபல்யமாக்கியவர்.பூணுக்கு அழகளிக்கும் பொற்கொடியாள் போல இவர் நடித்ததாலேயே படம் அழகாக உள்ளது.Michelle(மைக்கல் அல்ல மிட்ஷேல்) ஆக நடித்துள்ள Zendaya அவ்வப்போது கவனிக்க வைக்கிறார்.மேலும் பீட்டரின் குண்டு நண்பனாக Jacob,லிஸ்ஸாக நடித்துள்ள Laura  அனைவரும் நடிப்பில் நலமே.May Parker,அந்த கதாபாத்திரத்தை வைத்து ஏதோசெய்துள்ளார்கள்.

Computer Graphics,ஒளியமைப்பு என்பனவற்றில் குறை சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.Sony ஒலியமைப்புக்காக முதல் ஸ்பைடர்மேன் படத்திலேயே Oscar வாங்கியவர்கள்.தரம் இன்னும் கூடியிருக்கிறது.இசை உண்மையை சொல்வதானால் முதலிரண்டு Franchiseகளையும் விட நன்றாகவுள்ளது.டைட்டிலில் 1960களில் வந்த ஸ்பைடர்மேன் தொலைக்காட்சித் தொடர் தீம்,இன்னும் புத்துணர்ச்சி குறையவேயில்லை.

படத்தில் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்வரை அயன்மேன் கதாபாத்திரத்தை Depend செய்துதான் ஸ்பைடர்மேன் கதாபாத்திரமுள்ளது.கதாபாத்திரத்தின் தனித்துவத்தை அது கெடுத்து விடுகிறது.Spiderman 2 Train sequenceல் இருந்த விறுவிறுப்பு இதில் வரும் கப்பல் Sequenceல் துளியும் இல்லை.தொடக்கம் முதலே விறுவிறுப்பு குறைவாக மெதுவாகத்தான் படம் செல்கிறது அல்லது பரபரப்பான காட்சிகள் மிகவும் Predictableளாக உள்ளது.ஸ்பைடர் மேன் Tony Stark போல் Suitஐ நம்பியவன் அல்ல இது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் பீட்டர் பாக்கர் இதை நம்புவதற்கே கிளைமாக்ஸ் வரை நேரம் தேவைப்படுகிறது.சின்னதொரு கதை,கிட்டதட்ட ஒரு 10 சீன்கள் அளவுதான் கதையின் ஆழம்.இடைவேளைவரை தாங்கக்கூடிய கதையை வைத்துக்கொண்டு முழுபடத்தையும் காட்ட முயற்சித்துள்ளார்கள்.கண்டிப்பாக இந்த Attempt எடுபடவில்லை.அடுத்த முறையாவது நல்லதொரு Spiderman படத்தை தருவார்கள் என நினைக்கிறேன்.

படத்தில் Easter Eggs எனப்படும் மறைத்துவைக்கப்பட்ட சங்கதிகள் நிறையவே உள்ளன.இவற்றை உடனேயே நம்மால் இணங்கான முடியாது.இணங்கண்டு கொண்டு படம் பார்த்தால் இன்னும் தெளிவோடு படம் பார்க்க முடியும்.Damage Control என்னும் அணியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.டொனி ஸ்டார்க்கின் உதவியோடு செயற்படும் இந்த டீம் சூப்பர் ஹீரோயிஸ சண்டைகளால் வரும் சேதங்களை சரிசெய்பவர்கள்.காமிக்ஸ் இவர்களுக்கென்று தனியாக ஒரு பகுதி உள்ளது.படத்தில் Damage Controlக்கு பெரிய வேலையில்லை,இனிவரும் படங்களில் எவ்வாறு என தெரியவில்லை.Michelleதான் இனி MJ.Mary Janeக இனி இவர்தான் தொடருவார்(Michelle வேறு கதாபாத்திரம் Mary Jane வேறு கதாபாத்திரம்,ஆனால் இந்த  கதைப்படி இரு கதாபாத்திரங்களும் ஒரே நபரைதான் குறிப்பிடுகிறது).Sinister Six குழுவில் வரும் மூன்று நபர்களை படத்தில் அறிமுகப்படுத்திவிட்டார்கள்.ஆக வருங்காலத்தில் Sinister Six எதிர் ஸ்பைடர்மேன் வெளியாக பிரகாசமான வாய்ப்புள்ளது.இதில் இன்னொரு ஸ்பைடர்மேனும் உள்ளார்(கருப்பினத்தவராக நடித்துள்ளார்,Googleல் பார்த்து கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்).The Ultimate Spiderman,வருங்காலத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதாக்கப்படுமா இல்லையா என்பது MCUக்கே வெளிச்சம்.மேலும் 2099 Spiderman Costumeஐ ஒத்தொரு Suit இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஒருவேளை இது Ultimate Spidermanக்கு கொடுக்கப்படலாம்.

மொத்தத்தில் Spiderman Homecoming நல்வரவாகட்டும்..!

Wonder Woman(2017|3D)-Review


வொண்டர் வுமன் மற்றும் ஏனைய DC கதாபாத்திரங்கள் பற்றிய எனது கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்.

கிரேக்க கடவுளான ஸியுஸ் என்பவர் யுத்தங்களுக்கெல்லாம் அதிபதி ஆவார்.ஸியுஸின் மகனான ஏரிஸ் என்பவன் மனிதர்களையெல்லாம் அழித்து பூமியை கையக்கபடுத்துவதற்காக ஒரு மாபெரும் போரை ஆரம்பித்து வைக்கிறான்.கண்ணில்படும் மனிதர்களையெல்லாம் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறான்.கடவுள்களையும் அவன் விட்டுவைக்கவில்லை.அதேநேரம் தமது சாயலில் படைக்கப்பட்ட தன் குழந்தைகள் அனைவரும் மாண்டுபோவதை விரும்பாத ஸியுஸ் தன் மகனை வீழ்த்தி மனிதர்களை விடுவிக்கிறார்.பிற்காலத்தில் ஏரிஸ் மீண்டு வருவான் என ஊகிக்கும் ஸியுஸ் அவனிடமிருந்து உலகை காப்பதற்காக ஒரு ஆயுதத்தை படைக்கிறார்.அதை அமேஸானியன்கள் பொறுப்பில் ஒப்படைத்து அவர்கள் வாழ்வதற்கென ஒரு தீவையும் உருவாக்கிக் கொடுக்கிறார்.அத்தீவினாது வெளிமனிதர்களின் பார்வையில் இலகுவாக சிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டது.பெண்கள் மாத்திரமே வாழும் அந்த தீவின் இளவரசிதான் டயானா.சிறுவயது முதலே சண்டை பயிற்சிகள் வழஙகப்பட்டு பலம் பொருந்தியவளாக வளர்க்கப்படுகிறாள்.

ஒருநாள்,எதிரிகளிடமிருந்து தப்பியோடும் இராணுவ வீரனான ட்ரெவர் வழி தவறி அந்த தீவிற்குள் வந்து விடுகிறான்.அவனை கைது செய்து விசாரிக்கும் போது அவன் நேச நாடுகளை சேர்ந்த ஒரு ஒற்றன் என்பது தெரியவருகிறது.வெளியுலகில் உலக மகாயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவன் மூலமாக அறிந்து கொள்கிறாள் டயானா.உலக யுத்தத்தை அரங்கேற்றுபவன் ஏரிஸாக இருக்கும் என நினைக்கும் டயானா ஸியுஸின் ஆயுதங்களை தன்னகப்படுத்திக் கொண்டு ஏரிஸை அழிக்கும் நோக்குடன்  அங்கிருந்து ட்ரவரின் உதவியுடன் வெளியுலகிற்கு பயணப்படுகிறாள்.அங்கே அவள் முகங்கொடுக்கும் சவால்கள் என்ன,யுத்தத்தை அவளால் முடிவுக்கு கொண்டுவர முடிந்ததா என்பதை DCக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறது படம்.

Gal Gadot,வொண்டர் வுமனாகவே வாழந்துள்ளார்.இவர் ஒரு இஸ்ரேலிய பெண்மனி.இவரது உச்சரிப்பை கவனித்து பார்த்தீர்களானால் அந்த வித்தியாசத்தை உணர முடியும்.ட்ரெவராக Star Trek சீரிஸ் புகழ் Chris Pine.நடிப்பது தெரியாமல் நடித்துள்ளார்.ஏனையவர்களும் உறுத்தாமல் நடித்துள்ளனர்.

நிறைய நாட்களுக்கு பிறகு ஆங்கில படங்களில்  அருமையானதொரு தீம் மியுசிக்.அத்தனை இடங்களிலும் கச்சிதமாக இசை பொருந்திப் போகிறது. Rupert Gregson-Williamsன் நிறைய படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் வொண்டர் வுமன் வேறு லெவலில் இருக்கிறது.


டயானா மலையில் பாய்ந்தேறுவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.அதை பார்த்தவுடன் பாகுபலி ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.மேலும் நான் பெரிதும் எதிர்பார்த்த Poison Ivy என்ற வில்லத்தனமாக கதாபாத்திரத்தை ஒழுங்காக பயன்படுத்தவில்லை.
அதேவேளை நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வரும் ட்விஸ்ட் ஒன்றும் படத்தில் உள்ளது.

No man's Landல் டயானா கால்பதிப்பது,படத்தின் இறுதி அத்தியாயங்கள் என்பன மிகவும் தனித்துவமான இருக்கின்றன.எனினும் ஏற்கனவே புத்தங்களிலும்,அனிமேஷன் படங்களிலும் வொண்டர் வுமனை பார்த்தவன் நான்.படமும் அதேபோலவே உள்ளது.சின்னஞ்சிறிய மாற்றங்களை செய்திருப்பினும் பெரிதாக படத்துடன் ஒன்ற முடியவில்லை.இத்தனைக்கும் கதை நடக்கும் காலகட்டம்,அவை தரும் உணர்வு என்பன நன்றாகவே இருந்தன.ஆயினும் ஏதோ ஒன்று படத்தின் ஜீவனை கெடுத்துக் கொண்டிருந்தது.அதற்கு நான் படம் பார்த்த அரங்கும் காரணமாக இருக்கலாம்.MC Superiorல்தான் நான் படம் பார்த்தேன்.இறுதியாக அங்கு Fantastic Beasts பார்த்ததாக ஞாபகம். முப்பரிமாணம்,ஒளியமைப்பு,காட்சிகள் என்பன மிக தெளிவாக இருந்தது.ஆனால் இன்று திரையில் முக்கால் பங்கிற்குதான் Resolution அமைத்திருந்தார்கள்.3D கண்ணாடி அணிந்த பின்பும் காட்சிகள் இரண்டிரண்டாக தெரிந்தது.கொடுத்த காசிற்கு வெர்த்தாக இந்த திரையனுபவம் எனக்கு இருக்கவில்லை.இதில் இடைவேளை கூட விடாததால் கண்வலி வேறு.

நல்ல ஒளி,ஒலி தொழிற்நுட்பமுள்ள திரையரங்கில் படத்தை பாருங்கள்.DCயின் பரம விசிறிகளுக்கு கண்டிப்பாக படம் பிடிக்கும்.

A.P:படத்தில் post credit காட்சிகள் இல்லை வீணாக என் போன்று படம் முடிந்தபின்பும் காத்திருக்க வேண்டாம்.மேல விமர்சனத்தில் சில ஸ்பாய்லர்கள் மறைந்துள்ளது.படம் பாரத்தபின் அவை உங்களுக்கு புரியலாம்(அதை நீங்கள் கவனித்து படிக்கும் பட்சத்தில்).

The Flash(Tv Series-Season 01)எனது வலைத்தளத்தை என்றேனும் ஒருநாள் நன்றாக அலசிப்பாருங்கள்.மார்வல் காமிக்ஸை விட டீசி பற்றிதான் அதிகமாக எழுதியிருப்பேன்.பல நேரங்களில் மார்வலை புகழ்ந்தும் டீசியை கீழிறக்கியும் எனது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கலாம்.குறிப்பாக டீசியின் சமீபத்தைய திரைப்படங்கள் என்னில் இருக்கும் சராசரி சினிமா ரசிகனை திருப்திபடுத்தியிருக்காது.ஆனால் மார்வலின் அத்தனை படங்களையும் விட நான் ஆவலுடன் எதிர்பார்த்து கண்டுகளித்தது Batman vs Supermanஐ தான்.சாதாரணமாக பார்த்தபோது அதனில் பல குறைகள் தென்பட்டன.எனினும் தெளிவாக செல்லும் கதை அதன் கதாபாத்திர வடிவமைப்பு என்பனதான் அதே படத்தை நான் மும்முறை சலிப்பின்றி பார்க்க காரணமாக இருந்தது.டீசியின் கதாபாத்திரங்கள் ஆழமானவை.IMAXல் அடித்து கொள்வது அவர்களது முதன்மையான தொழிலல்ல,டீசியின் சிறப்பம்சமே கதைசொல்லல்தான்.BVSல் கூட அதன் கதை,அது சொல்லப்பட்ட விதம் என்பதை ரசித்து பார்த்தேன்.ஆனால் அதற்கு திரைக்கதை எழுதி சரியான காரணா காரியங்களை முன்னளிப்பதில் அவர்கள் தோற்றுவிட்டனர்.டீசியின் நாயகர்கள் எப்படிப்பட்டவர்கள்,அவர்கள் உலகைக் காப்பதைக் காட்டிலும் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் அக்கறை கொள்பவர்களாக இருப்பது ஏன்,அவர்கள் ஏனையவர்களுடன் சேர்ந்து வாழ எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்னும் கேள்விகளையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டு அதனை அட்சர சுத்தமாக திரைக்கதையில் புகுத்தி எழுத்தப்பட்டிருக்கும்/எடுக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்தான் CW சேனலில் வெளியாகும் The Flash.

CW சேனலில் The flash 2013ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இதுவரை மூன்று சீசன்களை எட்டியுள்ள இத்தொடரின் மூன்றாம் சீசன் வரும் செவ்வாய்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.நான் முதல் சீசனை முழுவதும் பார்த்து முடித்துவிட்டேன்.முதல் சீசனைப் பற்றி சற்றி விரிவாகப் பார்ப்போம்.

பேரி ஆலன் (Barry Alan)என்னும் சிறுவனை உறங்கவைத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார் அவனது அம்மா.நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் பேரி ஆலன் ஏதோவோர் அலறல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான்.அவனை சுற்றி அமானுஷ்யமாக ஏதோவொன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை உணரும் அவன் வெளியே சென்று பார்க்கிறான்.அங்கே,தன் தாயைச் சுற்றி இரண்டு ஒளிவட்டங்கள் வேகமாக நகருவதைப் காண்கிறான்.அவன் தன்னையறியாமலேயே வீட்டுக்கு வெளிய எடுத்துச் செல்லப்படுவதை உணர்கிறான்.சற்று நேரத்திற்குபின்,அவனது அம்மா கொலை செய்யப்பட்டுள்ளதையும் அதற்காக அவனது தந்தை கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படுவதையும் பார்க்கிறான்.(இந்த காட்சியை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்,இதே காட்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் வேறுபட்ட கோணங்களில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்).

ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன.பேரி ஆலன் சென்ட்ரல் நகர காவல்துறையில் ஒரு தடவியல் நிபுணனாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.அவனது ஒரே லட்சியம் தன் தந்தையை நிரபராதி என நிரூபிப்பதே.அதே துறையில் டிடெக்டிவ் போலீஸாக(துப்பறியும் காவல் அதிகாரி என்னும் விழிப்பு பொருந்தவில்லை) பணியாற்றும் ஜோ வெஸ்ட் என்பவர்தான் பேரியின் வளர்ப்பு தந்தையாவார்.ஜோ வெஸ்டின் மகளான ஐரிஸும் பேரியும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள்,அதே நகரில் வாழும் ஹரிசன் வேல்ஸ் என்னும் விஞ்ஞானியின் விஞ்ஞான கூடமான S.T.A.R லேப்ஸில் துகள்கள் பற்றிய ஆராய்சியின் போது துகள் வேகவிரைவுபடுத்தும்(Particle Accelerator) கருவி வெடித்ததனால் அந்த நகரமே பெரும் சேதத்திற்கு உட்படுகிறது.இதன்போது ஏறபட்ட தாக்குதலினால் பாதிக்கப்படும் பேரி ஆலன் 9 மாதங்கள் சுயநினைவின்றி கோமாவில் கிடந்து  ஹரிசன் வேல்ஸின் கடும் முயற்சிக்கு பின்னர் சுய நினைவுக்கு திரும்புகிறான்.

சுயநினைவுப் வரப்பெற்ற ஆலன் உலகமே மிக மெதுவாக இயங்குவதை கவனிக்கிறான்.பின்னர்தான் அவனுக்கு தெரிய வருகிறது,உலகம் ஸதம்பிக்கவில்லை,அவன்தான் வேகமாக இயங்கும் ஆற்றல் பெற்றுள்ளான் என்பதை.இதேபோல் அந்நகரில் பலருக்கும் அந்த சம்பவத்தால் சூப்பர் பவர்கள் கிடைக்கப்பெறுகின்றன(இவ்வாறு அதீத சக்திகள் உள்ளவர்கள் Meta Human என அழைக்கப்படுகிறார்கள்).

S.T.A.R லேப்ஸின் ஹரிசன் வேல்ஸ் மற்றும் அங்கே பணிபுரியும் சிஸ்கோ ரமொன்,கேய்டிலின் ஸ்நோ ஆகியோரின் துணைக்கொண்டு தீய Meta Humansக்கு எதிராக Flash என்னும் பெயருடன் செயல்படுகிறான் பேரி ஆலன். அவனை எதிர்ப்பவர்கள் எப்படியானவர்கள்,உண்மையில் அன்றிரவு நடந்த சம்பவம்தான் என்ன,பேரி ஆலனை சுற்றியுள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சலிப்பு தட்டமால் கூறியிருக்கிறது இத்தொடர்.இத்தொடரில் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் நுண்ணிய விபரிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது.இதனால் கதாபாத்திரங்களுடன் ஒன்றுவது இலகுவாக இருந்தது.அதிலும் பேரி ஆலனின் கதாபாத்திரத்துடன் என்னால் இலகுவாக ஒன்ற முடிந்தது.ஜோ வெஸ்டின் பார்ட்னராக வரும் எட்டி(Eddie) முதற்கொண்டு சிறுசிறு கதாபாத்திர இடைவெளிகளை கொண்டவர்கள் வரை அத்தனை கதாபாத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது.அதிலும் Harrison Wellsன் கதாபாத்திரம் நின்றுபேசும்.
கதாபாத்திரங்கள் அத்தனையும் சென்ற நூற்றாண்டிலேயே எழுதப்பட்டுவிட்டதால் அதனை மேம்படுத்தும் வேலையை மட்டுமே குழுவினர் செய்துள்ளனர்,திருப்தியாக அதனை செய்துள்ளனர்.ஆக்ஷனை மட்டுமே நம்பாமல் அருமையான கதை அதில் வரும் கிளைக்கதை,Depth ஆன பாத்திர வடிவமைப்பு,உணர்வுகளுக்கு மதிப்பளித்து கதை பின்னல் என பல கோணங்களிலும் நிறைவானதாக இருந்தது சீசன் 1.

இத்தொடரில் தருக்க மீறல்களும் இல்லாமல் இல்லை.திறந்த வீட்டுக்குள் அது நுழைவது போல் எல்லோரும் S.T.A.R லேப்ஸுக்குள் நுழைக்கின்றனர்.இவ்வளவு பெரிய வெடிவிபத்து நடந்த பின்னரும் S.T.A.R லேப்ஸின் லைசன்ஸை அரசு தடை செய்யவில்லை.அதேபோல் டைம் கான்செப்டிலும் பல சந்தேகங்கள்(அதனை பின்னர் ஆராய்வோம்)

சிறுசிறு இடங்களில் தொய்வு இருந்தாலும் பெரும்பாலும் அத்தனை அத்தியாயங்களும்  வேகமாகவே செல்கின்றன.இது மாதிரியான சீரிஸ்களுக்கு தயாரிப்பு செலவு மிக அதிகம் காரணம் CG,VFX என்பனவே.ஹாலிவுட் திரைப்படங்களை எட்டித் தொடும் அளவிற்கு அருமையாக CG செய்துள்ளனர்.

ஸ்பாய்லர்கள் வரக்கூடும் என்பதால் Flash சீரிஸ் 1 பார்க்காதவர்கள்/ஸ்பாய்லர்களை படிக்க விருப்பமில்லாதவர்கள் கீழ் வரும் பந்தியை தவிர்ப்பது உத்தமம்.

முதல் சீசன் முடிவில் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.யாரேனும் விளக்க முடியுமெனில் விளக்கவும்.இறுதி அத்தியாயத்தில் Eddie தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதன் மூலமாக தன் சந்ததியில் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் Eobard Thawne என்னும் Reverse-Flashயை அழித்துவிடுகிறான்.இதன் மூலம் Thawne பிறப்பது தடுக்கப்பட்டதாக சிஸ்கோ கூறுகிறான்.ஆக Reverse-Flash பிறக்கவேயில்லை.பிறக்காத ஒருவன் எப்படி இறந்தகாலத்திற்கு சென்று பேரி ஆலனின் தாயை கொல்லமுடியும்,அது மட்டுமில்லாமல் அவனால்தான் துகள் விரைவுபடுத்தும் கருவியும் வெடிக்கிறது,அதன் மூலம்தான் பேரி ஆலனுக்கு சக்திகளும் கிடைக்கப்பெறுகிறது.ஆகவே அவன் சதாரணமானவனாக மாறியிருக்க வேண்டுமே.இதை ஒத்த பல சந்தேகங்கள் உளளன.

ஆக சமீப காலத்தில் வந்த அருமையான சூப்பர் ஹீரோ சீரிஸ்தான் The Flash.Flash ரசிகர்கள் தவற விட்டுவிடாதீர்கள்.

Baahubali 2:The Conclusion


காலையில் இருந்து பாசிட்டிவ் கமண்டுகளாக வரவே இரவு காட்சிக்கு விரைந்தோடி விட்டேன்.போன முறை போலல்லாது திரைக்கதையில் சற்றே அதிக கவனம் செலுத்தியிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு சென்றேன்.விளைவு...விரிவாகப் பார்ப்போம். 

தந்தையை சதி செய்து கொன்றவர்களை வீழ்த்தி மகன் அரியாசனத்தில்  ஏறினானா என்பதுதான் பாகுபலி இருபாகங்களினதும் மொத்த ஒன்லைன். 

சென்ற பாகம் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது கதை.அங்கே சிவுடுவுக்கு இருந்தது போலவே இங்கே பாகுபலிக்கும் மாபெரும் ஓப்பனிங் சீன் ஒன்றுள்ளது.அதன் பிறகு கண்டபடி அலைபாயும் கதை இடைவேளைக்கு முன்னர் உள்ள காட்சியில்தான் வந்து செட் ஆகிறது.அதுவரை எம்.ஜி.ஆர் காலத்திலேயே out of fashion ஆகி போன ஒரு பழைய கதையை எந்த வித புதிய திரைக்கதை நுட்பங்களுமின்றி பிரம்மாண்டம் என்னும் போர்வையை போர்த்தி எடுத்துள்ளனர்.அரங்கம் அதிரும் அளவுக்கு வரும் இடைவேளைக்காட்சியில்தான் ராஜமௌலி நினைவுக்கு வந்தார். 

இடைவேளைக்கு பின்னர் கதை முடிச்சுக்கள் விடுவிக்கப்படுவதிலாவது புதிதாக ஏதாவது இருக்கும் என நினைத்தது எனது தவறுதான்.இதற்கு பின்னரும் கூட மேலோட்டமாகவே கதை பயணிக்கிறது. கண்டிப்பாக திரைக்கதை நன்றாக எழுதப்படவில்லை,கதாபாத்திரங்களின் ஆழமும் கூட போதவில்லை.இதனால் அருமையான காட்சிகள்  பல இருந்தும்  ரசிக்க முடியவில்லை. திரைக்கதையை ஒரு ஓரமாக வைத்து விட்டு காட்சிப்படுத்தலுக்கு வருவோம்.

ஆரம்பம் முதல் அற்புதமான பல காட்சிகள் உள்ளன.மதம் கொண்ட யானையை அடக்குவதாகட்டும் யுவராணி தேவசேனாவின் நாட்டில் நடக்கும் போர் ஆகட்டும் பறக்கும் ரத பாட்டாகட்டும் அத்தனையுமே ஈர்க்கின்றன.அதிலும் பெண்களை தொடுபவனுக்கு பாகுபலி தரும் தண்டனை இருக்கிறதே,மெய் சிலிர்த்து நான் பார்த்த காட்சிகளுள் அதுவும் ஒன்று.

இசை,பாடல்கள் ஒரு துளி கூட ஈர்க்கவில்லை.ஆரம்பத்தில் தாலாட்டு பாடல் ஒன்று வருகிறது(எனக்கு எழுந்து ஓடிவிடலாமா 
எனத்தோன்றியது),தருணத்திற்கு ஏற்ற பாடலாக அது தோன்றவில்லை.இவ்வாறே ஏனைய பாடல்களும் உள்ளன.பறக்கும் ரதத்தை ரசித்தாலும் பாட்டை ரசிக்க முடிவதில்லை,அத்தோடு அந்த பாடல்தான் இருப்பதிலேயே கொஞ்சம் சுமாரான பாடலும் கூட.பிண்ணனி இசையில் ஆங்காங்கே ரசிக்கும்படியான கோரஸ்களாளான இசை காதுகளுக்கு விருந்தளிக்கிறது.மரகதமணி இந்த பாகத்தில் தன் முந்தைய இசைக்கு அருகாமையில் கூட செல்ல முடியாமல் திணறுவது இசை பிரியனான எனக்கு நன்றாவே விளங்குகிறது.ஒருவேளை பிண்ணினி இசையில் கவனம் செலுத்துகிறேன் என பாடல்களை அவசரகதியில் கம்போஸ் செய்திருக்கக்கூடும்.

நடிகர்கள் அனைவருமே தங்களது பாத்திரங்களை அருமையாக செய்துள்ளனர்.பிரபாஸ்,நடிக்க வேண்டிய சிற்சில இடங்களில் இலேசாக தடுமாறுகிறார்.பருந்து கொண்டு வரும் செய்தியை வாங்கி படித்தவுடன் அவர் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்கள்,தடுமாற்றம் தனியாக தெரியும்.அனுஷ்கா,ரம்மியா கிருஷ்ணன்,நாசர்,ராணா அனைவருமே போட்டிபோட்டு நடித்துள்ளனர்.அதிலும் கட்டப்பாவாக வரும் சத்தியராஜ் படத்தின் பெயரை Bahubali:The Rise of Kattapa என மாற்றியிருக்கலாம் என்னும் அளவிற்க்கு தூள் கிளப்புகிறார்.1980களில் இவர் கையாண்ட பல முகபாவனைகளை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்.அவை தனித்து வேறாக தெரிகிறது.என்றாலும்  அது எனக்கு பிடித்திருந்தது.
ஆம்,தமன்னாவும் இந்த படத்தில் இருக்கிறார்.இதில் புதியதாக குமாரவர்மன் என்னும் முக்கியமானதொரு கதாபாத்திரம் இணைக்கப்பட்டுள்ளது.ஆரம்பம் முதலே நன்றாக எழுத்தப்பட்ட அந்த கதாபாத்திரம் இறுதியில் சறுக்கி விழுந்தது வேதனையளிக்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகளில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் எனக்கு திருப்தியாகத்தான் இருந்தது.டப்பிங் நிறைய இடங்களில் சின்ங் ஆக மறுத்தது கண்கூடு.அடுத்தது என்ன என்ன என்பதை(கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை கூட) இலகுவாக கணித்துவிடமுடிகிறது.முதலிலேயே சொன்னது போல் உயிரோட்டமில்லாத திரைக்கதையால் முழுபடத்தையுமே திருப்தியாக ரசிக்க முடியவில்லை.

பல தருக்க மீறல்களும் இல்லாமல் இல்லை.30000பேர் கொண்ட,நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட படையை சில நூறு பேர் எதிர்த்து வெற்றியும் பெறுகிறார்கள் அதுவும் போதிய ஆயுதங்களும் திட்டமிடல்களும் இன்றி.ஃப்ளாஷ்பேக்கிலேயே கட்டப்பாவுக்கு 60 வயது என கூறுகிறான் பாகுபலி.ஆனால் பாகுபலியின் மகனுக்கு 25 வயது ஆன பின்னரும் கூட கட்டப்பா அப்படியேதான் இருக்கிறார்(நாசருக்கும் வயதாகவில்லை).பாகுபலியின் நெற்றி திலகத்தை கொண்டே அவன் அரச குலத்தை சேர்ந்தவனா இல்லையா என இலகுவாகக் கண்டறிந்திருக்கலாம்,ஆனால் தேவசேனா இதையெல்லாம் செய்யாமல் வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டேயிருக்கிறார்.
இதே போல் பல தருக்க மீறல்கள் படம் முழுவதும் பரவி கிடக்கின்றன.

ஆக நல்ல திரைக்கதையை தேடுபவர்களுக்கு ஏமாற்றமாகவும் பிரமாண்டம் தேடுபவர்களுக்கு  திருப்தியாகவும் தோன்றும் இந்த பாகுபலி

பாகுபலி பிரமாண்டம் மட்டுமே..!

சத்தமின்றி யுத்தம் செய்-ட்யுராங்கோ(Durango)


மேற்குலகில் காமிக்ஸ் என்னும் விதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே
விதைக்கப்பட்டுவிட்டது.இன்று விருட்சமாக வளர்ந்து கிளை விட்டிருக்கும் அதை எப்பேர்ப்பட்ட கோடாரி கொண்டும் வெட்டிவிட முடியாது.

ஆனால் இங்கோ நிலைமையையே வேறு.காமிக்ஸ் அதுவும் தமிழில்,மெல்லிய காற்றுக்கே சரிந்து விடக்கூடிய கட்டமைப்பில்தான் அது உள்ளது.இப்படியான நிலையில் இருந்து கொண்டு ஒரு நிறுவனம் அதுவும் தமிழில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரக்கதைகளை வெளியிட்டு கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது சாதாரண விடயமல்ல.முதலுக்கே வேட்டு வைத்து விடக்கூடிய நட்ட அச்சம் நிகழும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் ஒரு தொழிலில் நேரான பாதையில் தளர்வின்றி பயணிக்கும் லயன்,முத்து குழுமத்துக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

முத்து நிறுவனத்தினரின் 45வது ஆண்டு நிறைவாக வெளிவந்திருக்கும் இதழ்தான் ட்யுராங்கோ(பிரித்தானிய உச்சரிப்பில் டுராங்கோ என நினைக்கிறேன்). 1981ல் பிரான்கோ பெல்ஜிய காமிக்ஸ் கதாசிரியரும் ஓவியருமான Yves Swolfs அவர்களின் கைவண்ணத்தில் உருவான கதைதான் ட்யுராங்கோவினுடையது (இதில் Thierry Girod என்ற ஓவியரும் தற்போதுவரை பணியாற்றிக்கொண்டிருக்கிறார்).

80 களுக்கேயான ஈன்ஸ்மண்ட கலர் ஓவியங்கள் + ஒரு சாதரணமான அலட்டலில்லாத கதை என எனக்கு மிகவும் பிடித்தமான பாணியில் கதை செல்கிறது.வெகுமதி வேட்டையனான (அதே நேரம் கூலிக்காக கொலைகளையும் செய்பவன்) ஹீரோ, தனது சகோதரனை சந்திப்பதற்காக அவனது ஊருக்கு பயணப்படுகிறான்.தனது சகோதரனை ஒரு கும்பல் கொன்று விட்டது என்னும் உண்மை அந்த நகரிற்கு சென்ற பின்னர்தான் அவனுக்கு தெரிய வருகிறது .அதன்பின் அவன எவ்வாறான நகர்வுகளை எடுத்து வைக்கிறான் என்பதே கதை.இது முதலாவது அத்தியாயத்தின் கதை மட்டுமே.அதனில் இருந்து பல கிளைக்கதைகள் வேர்விடுகின்றன (ஆரம்பம் முதலே மரம், கிளை, வேர் என உவமித்துக்கொண்டிருக்கிறேன் என்பதால் ஏதும் நினைத்து விடாதீர்கள், எல்லாம் ஒரு continuityகாக தான்😆).

ஓவியங்களாகட்டும் கதையாகட்டும் ஆஹா ஓஹோ பாணியில் இல்லையென்றாலும் ரசிக்கும் படியாகவே உள்ளது.ஆங்காங்கே ஓவியங்களின் மீது ஒற்றை வர்ணத்தை தெளித்து விட்டிருக்கிறார் Yves.அதனை சற்றே சீர்படுத்தியிருக்கலாம்.கதையும் மிகச் சில இடங்களில் போரடிக்கிறது. மற்றபடி பெரிதாக குறை என்று சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை.காமிக்ஸ் மீது அதுவும் வன்மேற்கின் கௌபாய் கதைகள் மீது ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு தடவை முயற்சிக்கலாம்.